எல்லாம் வல்ல ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்ரஹ்மனின் பேரருட் கருணையினாலே ‘விராட் விஸ்கவர்மா’ என்னும் வலைப்பூவை வடிவமைக்க பேரருள் துணை கூட்டியுள்ளது. இன்று சாதி – மத – இன – மொழி வேறுபாடுகள் அற்ற தூய சமத்துவ சமுதாயம் உருவாகி, பல்கிப் பெருகி வேரூன்றி துளித்து, ஆல விருக்ஷமாய் கிளைப்பரப்பி வளர்ந்து வருவது கண்டு அனைவரும் அளப்பரிய மகிழ்வு கொள்கிறோம்.
எனினும், இந்து சமயப் பண்பாடு மிகவும் பழமையானது. “ஏதஸ் தர்ம ஸநாதனஹ” என்று வேதங்கள் இதன் பழமையை புகழ்பாடுகின்றன. இந்துமதத்தில் நாம் பிறந்தோம் என்பது இந்துக்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளக்கூடிய விஷயம்.
நமது குடும்பத்தில் வழிவழியாய் வந்த விலைமதிப்பற்ற ரத்தினக்கல் ஒன்று இருந்தால் அதை நாம் போற்றிப் பாதுகாத்து, மற்றவர்களுக்குக் காட்டி பெருமைப்படுவோம். இது மனிதனுக்கே உரிய இயல்பாகும். அவ்வாறே, நான் சார்ந்த மதத்தின் – இனத்தின் பெருமையை, புகழை இன்றைய இளம் சமுதாயத்தினர் அறிந்துகொள்ளும் வகையில் பழமையான நூல்களில் இருந்தும் பெரியோர் பலரின் அனுபவங்களிலிருந்தும், கலைகளை வளர்க்கும் வலைத்தளங்களில் இருந்தும் சிறிது சிறிதாய் சேமித்துத் தொகுத்துத் தந்துள்ளேன்.
இது யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. என்னை உயர்ந்தவன் என்று பறைசாற்றிக் கொள்ளவும் அல்ல. வரலாற்றில் கரைந்துவிட்ட சில இழைகளை அறிந்தவர்களுக்கு நினைவூட்டி, அறியாதோருக்கு எடுத்துக்காட்டவும் எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சியே.
இதில் தவறுகள் இருந்தாலும், திருத்தங்கள் இருந்தாலும் கோலோய்ச்சிக் கூறலாம், பாராட்டுக்களையும் பணிவோடு ஏற்கிறேன்.
No comments:
Post a Comment