இன்றைய ஆய்வறிஞர்கள் வேதம், ஸூக்தம், ஸாஸ்த்ரம் முதலிய நூல்களை நன்கு ஆய்ந்து, விஸ்வ கர்ம குலம் ப்ருகு குலம் என தெளிந்துள்ளனர். வாயு புராணத்தின் நான்காவது அத்தியாயத்தில், இந்த நெடிய பரம்பரை சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
விஸ்வகர்ம பெருமக்களுக்கு சமர்ப்பணம்.
த்ரிஷிரா விஸ்வரூபஸ்து த்வஸ்டு: புத்ராவ பவதாம்|
விஷ்வரூபானுஜஸ்சாபி விஸ்வகர்மா ப்ரஜாபதி:||
விஸ்வகர்ம மஹத்பூதம் விஷ்வகர்மானாம் மதங்கேஷூ ச ஸம்பூதா|
புத்ரா பஞ்ச ஜடாதரா:ஹஸ்ய கெளசல ஸம்பஔர்ணா பஞ்ச பிரண்மரதா ஸதா||
இவ்வழியிலான மரபுப்படம் தரப்பட்டுள்ளது:
தரன், துருவன், சோமன், அஹன், அனிலன், அனலன், ப்ரத்யுஸன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ஆவர். இவர்கள் பிரஜாபதியின் புத்திரர்கள் ஆவார்கள்.
பஞ்ச கர்ம குலங்களின் வம்சாவளி:
1) மனு :
விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற முனிவரின் மகளாகிய காஞ்சனையை மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா. பிற்காலத்தில் மனுவின் பெயரினால் அறியப்பட்ட அரசன் நீதிபரிபாலனையில் தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே இலக்கணம் வகுத்து, மனுநீதி என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார்.
2) மயன் :
விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர முனிவரின் மகளாகிய சுசனை இவரது மனைவி.
3) த்வஷ்டா:
விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை மணந்தார்.
4) சில்பி : ப்ருஹூ முனிவரின் புத்ரி கருணாவை மணந்தவர்.
5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :
ஜைமினி முனிவரின் மகளான சந்திரிகா இவரது மனைவி. இவரது வழித்தோன்றலான ஸூபர்ணரிஷி, விநதையின் மகனான கருடனுக்கு பொன்னொளியை வழங்கி, ஸ்ரீமந் மஹாவிஷ்ணுவின் வாஹனமாகும்படி அனுக்ரஹம் செய்தார். கருடன் அங்கிரஸ குலத்தில் உதித்த கன்வ முனிவரின் மகனாவார்.
ஆதாரம்: விஸ்வகர்மா விஜயபிரகாஷ், ஆசிரியர்: இந்திரதேவ்சர்மா
இந்துமதத்திற்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் கொள்ளப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் விஸ்வகர்மாவினைப் பற்றி ஏராளமான விஷயங்கள், சுலோகங்கள் காணப்படுகின்றன. இவற்றிலெல்லாம் விஸ்வகர்மா முழுமுதற் பிரம்மனாகவும், அனைத்துலகத்தையும் வடிவமைத்த சிறந்த கலைஞனாகவும், வித்தையின் (கல்வி) வடிவமாகவும், அனைத்துத் திறன்களிலும் நிபுணனாகவும், கலைகளின் தலைவனாகவும், எல்லா இடங்களிலும் நிறைந்தவராகவும், சிறந்த கலைஞர்களின் மனத்திலும், அவர்கள் உருவாக்கும் கலைப்பொருட்களில் வாஸம் செய்பவராகவும், யாரையும்-எவற்றையும் சாராது விளங்கும் தனிப்பெரும் பொருளாகவும், பூர்ணத்வமுடையவராகவும், ஸூர்ய ஒளி பொருந்தியவராகவும், ஸத்வ குணமுடைவராகவும் இன்னும் பலப்பல புகழொலிகளால் அலங்கரித்துப் போற்றப்படுகிறார். எப்போது ஆதியில் நீரும், நெருப்பும், காலநிலையும், அறிவும் (ஞானமும்), மணமும், உணர்வும், ப்ரம்மனும், விஷ்ணுவும், ருத்ரனும் இல்லையோ, வெற்றிடம் மட்டுமே இருந்தபோது தானே தோன்றியவர் விஸ்வகர்மா என்றும் விஸ்வகர்மா தோன்றிய விதத்தை வேதம் விவரிக்கின்றது.
கோத்திரங்கள்பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன. இன்று பலருக்கும் தங்களின் கோத்திரம் தெரியாது. தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
1) மனுவின் வழித்தோன்றல்கள் (இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக் வேதம்
2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக் கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் – சாம வேதம்
3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி கோத்திரம் – யஜூர் வேதம்
4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்
5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு) – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம்
வாஸ்த்து சாஸ்திரம் (கலை) தொடர்பான விதிமுறைகளையும், அக்கலையினது நுணுக்கங்களையும் சாக்ஷாத் சிவபெருமானே பராசர ரிஷிக்கு உபேதசம் செய்தருளினார். பராசரர் ப்ருஹத்ரதனுக்கும், ப்ருஹத்ரதன் தேவசில்பியான விஸ்வகர்மாவிற்கும் உபதேசம் செய்தனர். விஸ்வகர்ம பரப்ரஹ்மனே இன்றளவும் இக்கலையை காத்து, வளர்த்து வருவதாய் ஐதிஹம்.
ஆர்ஷபாரத கலாச்சாரத்துடன் தொடர்புடையவர்கள் விஸ்வகர்மாக்கள். இவர்களே முன்பு சிந்து நதி தீரத்தில் மொஹஞ்சதாரோ, ஹரப்பன் நகரங்களை நிர்மாணித்து, வாழ்ந்து சிந்துச் சமவெளி எனும் சீரிய நாகரிகத்தை உருவாக்கினார்கள். சிந்துச்சமவெளி நாகரிகமே பின்னாட்களில் மருவி இந்து என்னும் மதமாகியது.
வாயுபுராணத்தின் நான்காம் அத்யாயம், மத்ஸ்ய புராணத்தின் 252ஆம் அத்யாயம், மஹாபாரதம் அனுசாஷன பர்வம் 85ஆம் அத்யாயம் முதலியவற்றில் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம வம்சாவளியின் குலங்கள் விளக்கப்பெற்றுள்ளன.இரும்பு, மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர். உலகம் முழுவதிலும் இக்குலத்தோர் பரவி இருந்தாலும் ஆசியா கண்டத்தில் இவர்களின் பரவல் அதிகம் என புள்ளி – விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் வாழும் விஸ்வகர்மாக்கள் குறித்து அறிவோம்.
1) தமிழகம் :
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.
2) ஆந்திர மாநிலம் :
விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.
3) கேரளம் :
கேரள தேசத்தில் ஆச்சாரிகள் எனவும், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
4)கர்நாடகம்:
கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.
5) கோவா:
கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.
6) ராஜஸ்தான்:
ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள்.பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள். பொதுவாக இந்திய சமூகத்தில் இவர்கள் குறிப்பிடக்கூடிய சமுதாய-பொருளாதார நிலையினை பெற்றுள்ளனர்.
சமூக-பொருளாதார நிலைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் விளங்கும் இவர்கள் கிராமப்புற பொருளாதாரத்தில் சிறப்பான பங்கினை வகிக்கின்றனர். தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.
எழுத்தாளர் ஆனந்த் கே.குமாரசாமி ஹிந்து மற்றும் புத்தமதத்தினரின் தொன்மங்கள் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் கம்மாளர்கள் விஸ்வபிராமணர்கள் எனவும், வேதகம்மாளர்கள் எனவும் அறியப்படுகிறார்கள். அவர்கள் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்து, சிலோன், பர்மா, ஜாவா தீவுகள் போன்ற இடங்களில் வாழ்கிறார்கள். ஆன்மீகத்திலும், கல்வியிலும் தங்களை முன்னோடிகளாகக் கருதுகிறார்கள். இவர்கள் தங்களின் சடங்குகளைத் தாங்களே நடத்துகிறார்கள். பிராமர்களைச் சார்ந்து நிற்பதில்லை. என்று பதிவு செய்து இருக்கிறார்.
டாக்டர் கிருஷ்ணராவ் தனது நூலில், உயர்ந்த தொழில் நிலையையும், சமூக அந்தஸ்தையும் பெற்றவர்களாக இரும்பு வேலை, மரவேலை செய்வோரும், கைவினைஞர்களும் இருந்தனர். எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இவர்கள் மிகச் சிறப்பானதொரு சமூக-பொருளாதார நிலையைப் பெற்றிருந்தனர். பவித்ரமான பூநூல் அணிந்தும், தங்களை விஸ்வகர்ம பிராமணர்கள் என பிரகடனப்படுத்தியும் வாழ்ந்தனர். இவர்களின் புகழும் பெருமையும் வளர மிக முக்கிய காரணம், இவர்கள் தங்களது கலைத் திறமைகளின் மூலம் இந்தியப் பண்பாட்டினை, குறிப்பாக இந்து மத கலாச்சாரத்தை உலகினுக்கு உணர்த்தி, உணர்த்தியதுதான் என்று ஆய்ந்து கூறியிருக்கிறார்.
மறைக்கப்பட்ட வரலாறு:
சமுதாயத்திற்கான பெரும்பாலானத் தேவைகளை நிறைவேற்றியும், சமுதாயத்திற்குக் குருமார்களாய் இருந்து வழிகாட்டியும் வந்த விஸ்வகர்ம இனம் பேஷ்வாக்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு மிகப்பெரும் கொடுமைக்கு ஆளானது. இந்த வரலாறு பெரும்பாலும் ஆய்வறிஞர்கள் கூட அறியாதது. வரலாற்றின் ஆழ்ந்த ஏடுகளித் தேடிப்பார்த்தால் கிடைக்கும் இந்த அவலத்தின் சில துளிகள் இதோ…
பாஞ்சாலர்கள் என அழைக்கப்பட்ட விஸ்வகர்ம இனத்தவர்களின் சமூக முக்கியத்துவத்தையும், அபார வளர்ச்சியையும் கண்ட பிராமணர்கள் இவர்களை சமுதாயத்தினின்றும் ஒதுக்க ஆவல் கொண்டவர்களாய், பொறாமை மேலிட, இவர்கள் விஸ்வகர்மாக்கள். பிராமணத் தகுதியுடையவர்கள் அல்ல என்று கூறி பிராமணர்களாக ஏற்க மறுத்தனர்.இதனால் பிராமண-விஸ்வபிராமணர்களிடையே பல காலங்களாக விரோத மனப்பான்மை இருந்து வந்தது.
பேஷ்வாக்கள் எனப்படும் ஒரு இனத்தவர் மன்னர்களாக அரசாண்ட காலத்தில், விஸ்வகர்மாக்கள் பல வகையிலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஏனெனில், பேஷ்வாக்கள் பிராமண சமுதாயத்தைத் தழுவியவர்கள். இவர்கள் பாஞ்சாலர்களை இடுப்பில் வேட்டி கட்ட அனுமதிக்க வில்லை. வேறுசில காலத்தில் பஞ்ச கச்சம் போன்ற ஆடைகளை (பிராமணர்களுக்கு உரியது) அணிய தடை செய்தனர். சிகையை பாரம்பரிய வழக்கப்படி (மரபுப்படி) வளர்க்கவோ, கட்டவோ அனுமதிக்கவில்லை. இன்னும் நாம் அறியாத பல கொடுமைகளும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.
வேதகால நாகரிகத்தின் தோற்றுவாய்களாய் திகழ்ந்த இனம் ஒடுக்கப்பட்ட இந்த வரலாறு இன்று பெரும்பாலும் தேய்ந்து, மறைந்து வெளியில் தெரியாமல் போய்விட்டது.
எல்லாம் வல்ல ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்ரஹ்மனின் பேரருட் கருணையினாலே ‘விராட் விஸ்கவர்மா’ என்னும் வலைப்பூவை வடிவமைக்க பேரருள் துணை கூட்டியுள்ளது. இன்று சாதி – மத – இன – மொழி வேறுபாடுகள் அற்ற தூய சமத்துவ சமுதாயம் உருவாகி, பல்கிப் பெருகி வேரூன்றி துளித்து, ஆல விருக்ஷமாய் கிளைப்பரப்பி வளர்ந்து வருவது கண்டு அனைவரும் அளப்பரிய மகிழ்வு கொள்கிறோம்.
எனினும், இந்து சமயப் பண்பாடு மிகவும் பழமையானது. “ஏதஸ் தர்ம ஸநாதனஹ” என்று வேதங்கள் இதன் பழமையை புகழ்பாடுகின்றன. இந்துமதத்தில் நாம் பிறந்தோம் என்பது இந்துக்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளக்கூடிய விஷயம்.
நமது குடும்பத்தில் வழிவழியாய் வந்த விலைமதிப்பற்ற ரத்தினக்கல் ஒன்று இருந்தால் அதை நாம் போற்றிப் பாதுகாத்து, மற்றவர்களுக்குக் காட்டி பெருமைப்படுவோம். இது மனிதனுக்கே உரிய இயல்பாகும். அவ்வாறே, நான் சார்ந்த மதத்தின் – இனத்தின் பெருமையை, புகழை இன்றைய இளம் சமுதாயத்தினர் அறிந்துகொள்ளும் வகையில் பழமையான நூல்களில் இருந்தும் பெரியோர் பலரின் அனுபவங்களிலிருந்தும், கலைகளை வளர்க்கும் வலைத்தளங்களில் இருந்தும் சிறிது சிறிதாய் சேமித்துத் தொகுத்துத் தந்துள்ளேன்.
இது யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. என்னை உயர்ந்தவன் என்று பறைசாற்றிக் கொள்ளவும் அல்ல. வரலாற்றில் கரைந்துவிட்ட சில இழைகளை அறிந்தவர்களுக்கு நினைவூட்டி, அறியாதோருக்கு எடுத்துக்காட்டவும் எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சியே.
இதில் தவறுகள் இருந்தாலும், திருத்தங்கள் இருந்தாலும் கோலோய்ச்சிக் கூறலாம், பாராட்டுக்களையும் பணிவோடு ஏற்கிறேன்.